22 June 2016

மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் ?


மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் ? உடல் இல்லை என்றால் ஆன்மா எங்கு செல்லும் ? பேய்கள் உண்டா ? மறுபிறவி உண்மையா?
மனிதன் மரணமடைந்த பிறகு மூளை செயலற்றுப் போகும். உடல் விரைத்து விடும். இரத்தம் உறைந்து கருநீல நிறமடைந்து விடுவதால் உடல் கருத்து சில்லிட்டுப் போகும். உடலினுள் வாயுக்கள் விரிவடைந்து உடலானது வீங்கி விரிந்து, அழுகத் துவங்கும். அதற்குப் பிறகு எரித்தால் சாம்பலாகும், புதைத்தால் புதைத்த இடத்தில் ஓரிரு நாட்களில் புல் முளைக்கும். வேறென்ன நடக்கும் ?

இது உடலின் நிலை. ஆன்மா எங்கு செல்லும் ? ஆன்மா எங்கும் செல்லாது ! அது அங்கேயேதான் இருக்கும் ! எது ஆன்மாவாக விளங்கியதோ அதுவே உடலாகவும், உயிராகவும் விளங்கியது. அதிலேயே இந்த உடல் நிலை பெற்றிருந்தது. உடல் மறைந்து விட்டது. ஆன்மா தன்மயமாக எப்பொழுதும் போல எங்கும் நிரம்பி நிற்கிறது. இதுவே சித்தர்கள் மற்றும் என் குருநாதர் வேதாத்திரி மகரிஷியின் கொள்கை.

உலக மெங்கும் பரவி, எங்கும் நீக்கமற நிரம்பி இருக்கிற பேராற்றல் நம் உடலிலும் உயிராற்றலாக இருக்கிறது. இதையே முன்னவர்கள் பரமாத்மா, என்றும் ஜீவாத்மா வென்றும் குறிப்பிடுகின்றனர். அதில் இருந்து வந்தாலும் அதற்கு மாறுபட்ட குணநலன்களைப் பெற்றுத் திகழ்வதால், அதனுடைய இயக்க விதிகளுக்கு முரண்படுவதால் துன்ப நிலைக்கு ஜீவாத்மா ஆளாகிறது. நம் முன்னவர்கள் சொல்கிற தீர்மானமான விஷயம் என்னவென்றால் அதைப் போலவே களங்கமற்ற, பேதமற்ற, பரிசுத்தமான ஆன்மா மட்டுமே அதை அடைய முடியும். மற்றவை பரிசுத்தமாகிற வரை உலகில், பிறவிச் சுழலில் சிக்கி உழன்று கொண்டிருக்கும் என்பதுவே. இதற்கும் மாறுபட்ட கருத்து உள்ளது. அது என்னவென்றால் மறு பிறவி என்பதெல்லாம் கிடையாது. வாழும் வரை சந்தோஷமாக வாழ வேண்டும் மற்றவர்களையும் சந்தோஷமாக வாழவிட வேண்டும் என்பதாகும். ஆனால் எல்லோரும் இந்தக் கொள்கையை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் சுயநலம் என்பது மனிதனிடம் உள்ள மிகப் பெரிய பலவீனமாக இருக்கிறது. எனவே தன் சந்தோஷத்துக்காக அவன் மற்றவர்களை அழிக்கத் தயங்க மாட்டான். எனவே இந்த கருத்தில் நிறைய பேருக்கு உடன்பாடில்லை.

இன்னும் ஒரு கருத்து உள்ளது. மனிதனுக்கு மறுபிறவி கிடையாது. அவன் எண்ண அலைகள் அழிவதில்லை. அவை ஒத்த அலை வரிசை கொண்ட மற்றவர்கள் மனதில் புகுந்து கொண்டு எண்ணங்களை உண்டாக்கி செயலாக மலர்கின்றன. எனவே நல்லவற்றையே எண்ண வேண்டும், நல்லவற்றையே செய்ய வேண்டும், நல்லவர்களாக வாழ வேண்டும். அப்படி எல்லோரும் வாழ்ந்தால் உலகெங்கிலும் நல்ல எண்ண அலைகள் மட்டுமே மிதந்து கொண்டிருக்கும். பிற்காலத்தில் பிறந்து வரக்கூடிய நம் சந்ததிகள் நல்லவர்களாக இருப்பார்கள். இப்படிப் பலவிதமான கருத்துகள் நிலவி வந்த போதிலும், பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்வது மறுபிறவிக் கொள்கையையே. சிலர் சித்தர் சிவவாக்கியர் பாடலை மேற்கோள் காட்டுவார்கள். மறு பிறவி இல்லை என்று. கூர்ந்து கவனித்தால் அவர் மற்றொரு பாடலில் எழு பிறப்பைப் பற்றிச் சொல்லியிருப்பார். அதாவது,

கறந்தபால் முலைபுகா கடைந்தவெண்ணெய் மோர்புகா

உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா

விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டும்போய் மரம்புகா

இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை இல்லையே. இது அந்தப் பாடல். ஆனால் அதற்குப் பிறகு வருகிற ஒரு பாடலில்,

அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்

எவ்வெழுத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பது இங்கிலை... என்பார்.

எனவே அவர் மறு பிறவியை மறுக்கிறார் என்று சொல்வதற்கில்லை. முறைப்படி வாழ்ந்தவன். சிவத்தை உணர்ந்தவன் மறுபடியும் பிறப்பதில்லை என்று கொள்ளலாம்

ஆனால், இது குறித்து சமயங்கள் அனைத்தும் வெவ்வேறு கருத்துக்களை முன் வைக்கின்றன. இந்து மதத்தில் ரிக்வேதம் ஆத்மா பிரிந்து சென்று தோன்றிய இடமான பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்து விடுகிறது என்கிறது. வேறொரு பிரிவினர் ஆன்மாவானது நிலையானது. அழிவற்றது, பூரணமாக எங்கும் நிரம்பி நிற்பது, எல்லையற்றது. அதற்கு மரணம் கிடையாது. மரணம் என்பது ஓர் உடலினின்று மற்றோர் உடலுக்கு இடம் பெயர்தலாகும் என்கின்றனர். இன்னும் வேறு சிலர் வினைகளின் நிமித்தம் பிறப்பு, இறப்பு என்ற சுழலில் அகப்பட்டு ஆன்மா மேல் நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ் நிலைக்குத் தாழ்ந்தோ சென்று கொண்டேயிருக்கும். முற்றிலுமாகப் பக்குவப்பட்டு பிறகு முக்தி அடையும் என்கின்றனர். மனிதன் மீண்டும் மீண்டும் இவ்வுலகிலேயே பிறந்து தன் வெகுமதிகளையும் தண்டனைகளையும் பெற்றுக்கொள்கின்றான் எனவும் சுவர்க்கமும் நரகமும் இவ்வுலகிலேயே உள்ளன என்று ஒரு சிலர் கூறுகின்றனர். கீதை இது குறித்து,

वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोऽपराणि।

तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देही॥२२॥

உடைகள் கிழிந்து விட்டால் அவற்றைக் கழற்றி எறிந்துவிட்டு புதிய உடையை அணிவது போல, உடல் கெட்டு விட்டால் புதிய உடலொன்றை ஆன்மா பெற்றுக் கொள்கிறது என்கிறது.

மற்ற பிறவிகளில் செய்த தீமைகளின் விளைவுகள் தற்போது துன்பங்களாகத் தொடருகின்றன.கொடுமைப் படுத்துவோர் மீது யாதொரு குற்றமும் கிடையாது. நாமிழைத்த தீவினைகளின் பலாபலன்களே அவை! அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது புத்த மத கோட்பாடு. உலகம் படைப்பட்டது இல்லை, அது காலத்தைப் போன்று அந்தமும் இல்லாதது, ஆதியும் இல்லாதது, அது உருவாக்கப்படவும் இல்லை, அழிக்கப்படப் போவதும் இல்லை, அது தன்னியல்பில் இயங்கி வருகின்றது. நாமும் அவ்வாறே. எனவே எதுவும் சாப்பிடாமல், நீர்கூடக் குடிக்காமல், நாள் கணக்கில் பட்டினி கிடந்து உயிரைத் துறந்து விட்டால் சொர்க்கவாசலில் நுழைந்து இன்பம் பெறலாம் என்கிறது சமணம். கிருஷ்துவ மதத்திற்கு மறுபிறப்பில் நம்பிக்கை இல்லை. நன்மை செய்த ஆத்மாவாக இருந்தாலும் தீமை செய்த ஆத்மாவாக இருந்தாலும் ‘’இளைப்பாறுதல்’’ என்னும் இடத்தில் தங்கி இருக்கும். உலகம் அழிந்தபின் நன்மை தீமைக்கேற்ப சொர்கம் நரகம் செல்லும் என்று அது கூறுகிறது. ஆத்மா, சொர்க்கம், நரகம், உலகம் அழியும் என்ற கருத்துக்கள் எல்லா மதங்களுக்கும் பொதுவானவையாகவே இருக்கின்றன. தீமைகளை அதிகம் செய்தவனுக்கு புதைகுழி சுருங்கி அவனை நெருக்கும். நரகத்திலிருந்து கடும் வெப்பக் காற்று புதைகுழிக்குள் வீசும். நன்மைகளை அதிகம் செய்தவனுக்கு புதைகுழி அகன்று சொர்கத்தைப் போல அமைக்கப்படும். அதில் அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பான். உலகம் அழியும் நாளில்தான் உயிர்கொடுத்து கல்லரையிலிருந்து எழுப்பப்படுவர் என்கிறது மற்றொரு மதம்.

கூர்ந்து கவனித்தால் பெரும்பாலான மதங்களும் அதன் உட்பிரிவுகளும் பரம்பொருள் வேறு ஆன்மா வேறு என்கிற நிலையையே வலியுறுத்துகின்றன. ஆனால், ஒட்டு மொத்தமாக அனைத்து பிரிவினரும் நன்மை செய்து நல்லவனாக வாழ வேண்டும், தீமைகள் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக நிற்கின்றர். எனவே, இறந்து விட்டால் ஆன்மா எங்கு செல்லும் ? மறுபிறவி உண்டா ? என்றெல்லாம் கவலைப்படுவதை விடுத்து, அவரவர் முன்னோர்கள் காட்டிய வழியில் நல்லவர்களாக வாழ்ந்து விட்டுப் போய் விடுவதே நல்லது. நாம் அனைவருமே பரம்பொருளின் பரம்பரையில் இருந்து வந்தவர்களே. அனைத்திற்கும் மூலம் ஒன்றுதான். இதை விஞ்ஞானமும் சரி மெய்ஞானமும் சரி ஒத்துக் கொள்கின்றன. எனவே எந்த தேசம், எந்த மொழி, எந்த மதமாக இருந்தாலும் மூலமென்னவோ ஒன்றுதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஆன்மா எங்கு செல்லும் என்று கவலைப்படுகிற நாம் ஆன்மா எங்கிருக்கிறது ? எப்படி இருக்கிறது என்பதை அறிய முற்பட்டால் மிகவும் நல்லது. அப்படி ஆன்மாவை அறிந்து விட்டால் உங்கள் கேள்விக்கான விடைகள் அனைத்தும் கிடைத்து விடும்.

எனவே சூக்குமமான விஷயங்களை அறிந்து கொள்ளும் அளவுக்கு நம் அறிவை சூக்குமமடையச் செய்ய வேண்டும். இயலாத பட்சத்தில் தனக்கோ, பிறர்க்கோ, உடலாலோ, மனதாலோ தீங்கு செய்யாமல் வாழ்ந்து விட்டுப் போய் விட வேண்டும். அவ்வாறாயின் நன்மையின் பலன் நன்மையாகவே இருக்கும் என்பதில் எந்த வித ஐயமுமில்லை. அவரவர்கள் வாழ்ந்த சமூகம், அரசியல், கலாச்சார அடிப்படையில் அவரவர்கள் கருத்துக்களை சொல்லி வைத்திருக்கிறார்கள். அது உண்மையா, பொய்யா என்று ஐயம் எழுமாயின், அவர்கள் சொல்லியபடி நடந்து, வாழ்ந்து பார்க்க வேண்டும். இல்லை என்றால் நான் சொல்கிற படி நல்லவனாக வாழ்ந்து முடிய வேண்டும் அவ்வளவுதான். என்ன சொன்னார்கள் என்று ஆராயப் புகும் பொழுது, முதல் நிலையாக எதற்காகச் சொல்லியிருப்பார்கள் என்று அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் உண்மை விளங்க வரும்.

இதில் நல்லவனாக வாழ வேண்டுமென்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. எது நல்லது ? எது கெட்டது ? ஒருவருக்கு நன்மையாக விளங்குவது மற்றவருக்கு கெட்டதாகத் தீமை பயப்பதாக இருக்கிறது. நமக்கே கூட முன்பு நன்மையாக இருந்தது, பிறகு தீமையாகப் போய் விடுகிறது. என்ன செய்வது ? நன்மை, தீமை என்பது செயல்களில் இல்லை. அதன் விளைவுகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. எனவே நம் முன்னோர்கள் அதைக்குறித்து ஆராய்ந்து, தெளிந்து எவையெல்லாம் தீமை பயக்கும் பாதகச் செயல்கள், எவையெல்லாம் நன்மை பயக்கும் செயல்கள் என்று தெளிவாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவற்றைக் கடைபிடித்தாலே போதும், தீமையும், துன்பமும் நம்மை நெருங்கா வண்ணம் வாழ்ந்து நிறைவடையலாம். நம் வாழ்வில் வினைகளின் வாயிலாக நிகழ்காலம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. நம் கடந்த காலத்து வினைகளின் விளைவுகளே நிகழ்காலமாக இருக்கிறது. வினைகளைக் கடப்பவன் பிறவிகளை அறுத்தவனாவான். பேய்கள் என்பதும், சொர்க்கம், நரகம் என்பதும் நம்மிடமுள்ள தீய குணங்கள் மற்றும் இன்ப துன்ப நுகர்வுகள் குறித்த சொற்களே.

No comments:

Post a Comment