வரவு அதிகமாக இருந்து செலவு குறையும் பொழுதுதான் வாழ்க்கை சௌகர்யமாக இருக்கிறது. இதை எதற்காக சொல்கிறேன் என்றால், ஒரு மனிதனின் சராசரி வயது 120 ஆண்டுகள் என்று ஜோதிட சாஸ்திரம் மற்றும், ரிஷிகள், சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள். அது என்ன 120 ஆண்டுகள் ? நவகிரகங்களின் திசையையும் ஒரு மனிதன் கடந்தால் அவன் வயது 120. அதையும் தாண்டி நம் முன்னோர்கள் ஆரோக்யமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இந்த 120 ஆண்டுகள் பூரண ஆயுளுடன் வாழ்வதற்கு அடிப்படை என்ன என்பதை ஜோதிடர்கள் யாரும் சொல்வதில்லை. அவர்கள் கிரக சஞ்சாரங்களை வைத்து பூரண ஆயுள், மத்திம ஆயுள், அற்ப ஆயுள் என்று சொல்கிறார்கள். உண்மையில் நாள் ஒன்றுக்கு 21600 சுவாசங்கள் முறையாக சுவாசிக்கிற ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வாழ முடியும்.
ஆனால் அவ்வாறு சுவாசிக்க முடியாத நிலையில் நடைமுறை வாழ்வு மனிதனுக்கு அமைகிறது. பேசாமல் நம்மால் இருக்க முடியுமா ? முடியாது. ''பேசாம இருந்தா உங்க கிட்டல்லாம் பொழைக்க முடியுங்களா ?'' என்று சிவாஜி அவர்கள் திருவிளையாடல் என்ற சினிமாவில் சொல்வார். எனவே பேசாமல் இருப்பது என்பது இயலாத காரியம். ஆனால் பேசுவதினால் 12 அங்குல சுவாசம் வெளியே சென்று எட்டு அங்குலமே உள்ளே செல்கிறது. இதனால் 4 அங்குல சுவாசம் நஷ்டமாகிறது என்பது கணக்கு. அது போலவே நாம் ஓடும் போது 54 அங்குலம் சுவாசம் வெளியேறி 27 அங்குலமே உள்ளே செல்கிறது. இதில் 27 அங்குலம் நஷ்டம் ஏற்படுகிறது. தூக்கம் உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் அவசியான ஒன்றாகும். ஆனால், மனிதன் உறங்கும் போது 48 அங்குலம் சுவாசம் வெளியேறி 30 அங்குலமே உள்ளே செல்கிறது. எனவே இதிலும் 18 அங்குலம் நஷ்டம். நடக்கும் போது 16 அங்குலம் வெளியேறி 8 அங்குலம் உள்ளே செல்வதால் 8 அங்குலம் நஷ்டம். கடின வேலைகள் செய்யும் போது 20 க்கு 10 என்ற வகையில் 10 அங்குலம் நஷ்டம். சண்டையிடும் போது 24 க்கு 12 என்ற கணக்கில் 12 அங்குலம் நஷ்டம். உடலுறவு கொள்ளும் போது அதிக பட்சமாக 64 க்கு 24 என்ற கணக்கில் 40 அங்குலம் நஷ்டம். சராசரி மனித வாழ்வில் இவையெல்லாம் தவிர்க்க முடியாத விஷயங்களாக உள்ளன.
ஆனால் ஞானிகள், மகான்கள், துறவிகள், பிரம்மச்சாரிகள் வாழ்வில் இந்த செயல்பாடுகள் குறைகின்ற காரணத்தினால்தான் அவர்கள் பிரகாசமாக விளங்குகிறார்கள். இது என்னடா இது புதுக் கதை, இந்த விபரப்படி பார்த்தால் எந்த வேலையும் செய்யாமல் இரு என்று சொல்வது போலிருக்கிறதே. அது அப்படி அல்ல. மனிதன் செலவழிக்கத் தெரிந்ததைப் போல, சம்பாதிக்கவும் தெரிந்தவன். வருவாயைவிட செலவு அதிகமானால் துன்பம் ஏற்படும். வருவாய் அதிகமாகா விட்டாலும் செலவு மட்டும் வருவாய்க்கு உள்ளடங்கி இருப்பதுவே நலம் பயக்கும். அமெரிக்கா வல்லரசாகவும், செல்வ செழிப்புடனும் விளங்கும் சூட்சுமம் இதுதான். ஏற்றுமதி அதிகம். இறக்குமதி குறைவு. அதாவது வருவாய் அதிகம். செலவு குறைவு.
ஆகாதன விட்டி தாயினுங் கேடில்லை
போகா புகலாக் கடை.
என்ற குறளை சிந்தித்துப் பார்த்தால் விளங்கும்.
இந்த சுவாச நஷ்டத்தை இரவில் படுக்கும் போது இடது கையை கீழே வைத்துப் படுத்து சரி செய்யலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது. மேலும் சந்தியாவந்தனம் என்ற மூச்சுப் பயிற்சியுடன் கூடிய வழிபாட்டு முறை இந்த குறையை நிவர்த்தி செய்ய எற்படுத்தப்பட்டதே. காலப் போக்கில் அதை கைவிட்டு மக்கள் துன்புறுவதைக் கண்ட சித்தர்கள் இந்த மூச்சிப்பயிற்சியையும், மலைவாழ் மக்கள் பிராணவாயுவை அதிகம் பெறுவதற்காக கடைபிடிக்கும் மூச்சுப் பழக்கத்தையும் ஆராய்ந்து, தெளிந்து பிராணாயாமமாகத் தந்தார்கள். பிராணாயாமத்தில் ஒரு நிமிடம் சுவாசத்தை உள்ளே நிறுத்தி பழகும் போது, 15 சுவாசங்கள் மிச்சமாகின்றன. ஒரு நாள் ஒன்றுக்கு 10 பிராணாயாமம் செய்தால் 150 சுவாசங்கள் மிச்சமாகின்றன. இந்த முறைப்படி மூச்சை குறைத்து ஆயுளைக் கூட்டிக் கொள்ளலாம்.
இந்த அடிப்படையில்தான் திருமூலர் எண்ணிலா கோடி யுகமிருந்தேனே என்கிறார். பிராணாயாமம் என்றால் மூச்சை அடக்குவது என்பார்கள். ஆனால் உண்மையில் பிராணா என்றால் காற்று, ஆயாமம் என்றால் தீர்க்கமாக காற்றை வெளியே விடுதல் என்பதே பொருள். சபரி மலையில் ஏறும் பக்தர்கள் சரண கோஷம் போடுவது இந்த அடிப்படையில்தான் . சாதாரணமாக ஏறுபவர்கள் தஸ்புஸ் என்று மூச்சுவிட்டு சீக்கிரம் தளர்ந்து விடுவார்கள். சரண கோஷம் போடுபவர்கள் மூச்சு சீராக இயங்குவதால் அவர்களுக்கு தளர்ச்சி என்பதே ஏற்படாது. கிராமத்தில் ஏற்றம் இறைப்பவர்கள், ஓடக்காரர், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுபவர் இவர்களெல்லாம் ஏலேலோ ஐலசா என்று பாடிக் கொண்டே செயல்படுவது இந்த மூச்சின் சூக்கும இரகசிய அடிப்படையில்தான். உழைக்கும் போது மூச்சு அதிகமாக உள்ளிழுக்கப்படுகிறது. அதே அளவு அதை மெதுவாக வெளியே விட அவகாசமில்லாமல் போக, மறுபடியும் மூச்சை உள்ளே இழுத்து திணறல் ஏற்படுகிறது. ஆனால் இந்த கோஷங்கள் உள்ளே சென்ற மூச்சு மெதுவாகவும், ஒரே சீராகவும் வெளியேற உதவுகின்றன.
உலகில் ஒவ்வொருவருக்கும் இத்தனை ஆண்டுகள் என்று விதிக்கப் படவில்லை. இத்தனைவ சுவாசம் என்றே விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த சுவாசத்தை சிறுகச் சிறுக மெதுவாக உபயோகித்து நீண்ட ஆயுளைப் பெறலாம். கையில் ஒரு தொகையை வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக செலவு செய்தால் முற்றிலும் தீர்ந்து போக அதிக நாட்கள் ஆகுமல்லவா ? அதே முறையைதான் இந்த பிராணாயாமத்தின் மூலம் சுவாசத்தை செலவழிப்பதில் கடைபிடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment